தமிழ்த் தலைமைகள் கோரும் சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிவகையும் பகுதி : 01



ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 13.03.2022  அன்று நடாத்தப்பட்ட "தமிழ்த் தலைமைகள் கோரும் சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிவகையும்" என்கிற உரையாடல் வகுப்பின்  முதல் பகுதி இங்கே பிரசுரமாகிறது.

ஈழத்தமிழ் மக்களினுடைய பல்வேறு தரப்பை சேர்ந்த தலைவர்களும் வைத்திருக்கும் கோரிக்கைகளும் அந்த கோரிக்கைகள் செயல் வடிவம் பெறுவதற்கு உரிய நடைமுறைகள் பற்றியும் இங்கு பேசப் போகின்றோம். முக்கியமாக தமிழ் அரசியலில் அறிவியலை ஒரு முறைமையாக பார்க்க வேண்டும் என்கிற சிந்தனையின் அடிப்படையில் பேசப் போகிறோம்.

இன்று தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற தலைவர்கள் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடங்குகிறார்கள். அந்த மூன்று பெரும் பிரிவுகளுக்கும் அடிப்படையான ஒரு கோரிக்கை சமஸ்டி என்பது தான். இவற்றில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு நாடு என்கின்ற அமைப்பில் தமிழர்கள் சிங்கள மக்களோடு சேர்ந்து ஒரு நாட்டுக்குள் சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்படுகிறது. 

இந்த கோரிக்கையில் மூன்று பெரும் அணிகளாக தமிழர்கள் உள்ளார்கள். ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவர்கள் செல்வநாயகத்தின் பாரம்பரியத்தில் வந்த சமஸ்டி கோரிக்கையை பற்றி சொல்கிறார்கள். அவர்களுடைய அடிப்படை கோரிக்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட சமஸ்டி கோரிக்கையை அடிப்படையாக கொண்டது. 1949 ஆம் ஆண்டு முதன்முறையாக சமஸ்டி கோரிக்கை தமிழ் தரப்பில் கொண்டு வரப்பட்டது.

மற்றையது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினது. ஒரு நாடு இரு தேசம் என்கின்ற அடிப்படையில், குறிப்பாக கனடாவில் காணப்படுகின்ற சமஸ்டி முறையை உதாரணம் காட்டி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு இருந்தார்கள். 

மூன்றாவதாக, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அணியினர் கூட்டாட்சி (confederation) என்கிற அதிக உச்சபட்ச சமஸ்டி கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். இந்த மூன்றும் குறைந்தபட்சம் சமஸ்டி ஆட்சி முறையை அடிப்படையாக கொண்டவை தான். 

இந்த மூன்று பிரிவினரும் முன்வைத்திருக்கின்ற கோரிக்கையை வரலாற்று ரீதியாகப் பார்ப்போம். வரலாற்றுப் பார்வை மிகவும் முக்கியமானது. அப்படி பார்த்தால் நகைப்புக்கு இடமான முறையில், நாங்கள் தலை கோணக் கூடிய வகையில்   சமஸ்டிக் கோரிக்கையின் போக்கு எமது வரலாற்றில் இடம்பெற்று இருப்பதை நாங்கள் துயரத்துடன் பார்க்கலாம்.

மங்கோலிய புராணக் கதை ஒன்று உண்டு. மூன்று தலை நாகத்திற்கு ஒரு வயிறு இருந்தது. மூன்று தலைகளும் சேர்ந்து ஒரு வயிற்றுக்கு உணவு கொடுக்க முடியாமல் மூன்று திசையில் அடிபட்டு இறுதியாக அந்த மூன்று தலை பாம்பு இறந்து போய் விடுகிறது. இன்னொரு நாகம் இருந்தது, மூன்று வயிறு ஒரு தலை. அந்த ஒரு தலை உடைய நாகம் மூன்று வயிறுகளுக்கும் தாராளமாக உணவு கொடுத்து அந்த பாம்பு உயிர் வாழ்ந்ததாக அந்த புராணக் கதை கூறுகிறது. மங்கோலிய  மன்னன் ஜெங்கிஸ்கான் தனது சொந்த பிள்ளைகளிடையே ஏற்பட்ட சிம்மாசன போட்டியின் போது இந்த கதையை கூறி இந்த கதையின் அடிப்படையில் வெற்றிகரமாக அந்த பிரச்சனையை தீர்த்து விட்டார். இந்த கதையில் மூன்று தலை நாகமும் ஒரு வயிறும் பற்றிய பிரச்சனையை முதலில் பார்ப்போம். 

இங்கு ஒரு சமஸ்டி கோரிக்கையை மூன்று பேரும் வைத்திருக்கிறார்கள், சின்ன சின்ன வித்தியாசங்களோடு. ஆனால் மூன்று பேரும் மூன்று தலைகளாக இருக்கிறார்கள். இந்த மூன்று தலைகளாக இருப்பதனுடைய வரலாற்று வளர்ச்சி போக்கு என்னவென்பதை கேட்டால் இந்த மூன்று தலைகளும் ஒரு முன்னணியை உருவாக்கி தங்கள் வேறுபட்ட கொள்கைகளின் மத்தியில் ஒரு தலையாக சிந்தித்தால் அந்த ஒரு வயிற்றுக்கு சாப்பாடு போட முடியும். ஆனால் மூன்றாக வெவ்வேறு திசைகளில் சிந்திப்பது ஒரு போதும் இந்த ஒரு வயிற்றுக்கு சோறு போடாது. இங்கு மூன்று தலைகளும் அடிபட்டு இறுதியில் வயிற்றுக்கு சாப்பாடு இன்றி நம்மை சாகக் கொடுப்பதில் தான் முடியும். சோகமான இந்த கதையை எல்லோரும் மிகவும் ஆக்கபூர்வமாக கரிசனையில் கொள்ளல் வேண்டும்.

மேலும் ஒரு கதையை பார்ப்போம். ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) என்பவர் "The Old Man and the Sea" ஒரு நாவலை 1952 இல் வெளியிட்டார். அது  தமிழில் “கடலும் கிழவனும்” என்ற பெயரில் வெளிவந்தது. அந்த நூலில் மார்லின் என்று சொல்லப்படுகின்ற பெரிய இன மீனை சந்தியாகோ என்ற ஒரு கிழவன் கடலில் ஒரு படகில் பல நாள் காத்திருந்து வெற்றிகரமாக பிடித்து விட்டான். ஆனால் அந்த விலையுயர்ந்த பெரிய ரக மீனை சிறிய படகிற்குள் இழுத்து போடுவது கடினமாக இருந்தது. மாறாக மீன் படகை இழுத்து கொண்டு போக தொடங்கி விட்டது. இப்பொழுது தனது பாதையில் படகு ஓடுவதற்கு பதிலாக அந்த பாரிய மீனின் பாதையில் அது இழுத்து செல்லும் இடம் எல்லாம் அந்த படகு அலைக்களிக்கப்பட்டது. மூன்று நாட்களாக போராடி அந்த மீனைக் கொன்று தனது படகின் ஒரு பக்கத்தில் அதனை இணைத்துக் கொண்டு சந்தியாகோ கரையை நோக்கி படகை செலுத்தினார்.  ஆனால், அந்த மீனில் இருந்து வந்த குருதி ஏனைய கடல் பிராணிகளை ஈர்த்தது.  இறுதியாக படகு கரை சேரும் பொழுது அந்த பிரமாண்டமான மீன் கடல் பிராணிகளால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டது. அந்த மீனோடு அந்த கிழவன் போராடிய போராட்டங்கள் பிரமாண்டமானது. இறுதியாக அந்த மீன் கரை ஒதுங்கிய பொழுது அதன் எலும்புக் கூடுதான் எஞ்சி இருந்தது. மீன் மிஞ்சவில்லை. தசை மிஞ்சவில்லை. இது தான் எங்களுடைய இன்றைய வரலாற்று போக்காக உள்ளது.  

இன்று தமிழீழம் அரைவாசிக்கும் மேல் எலும்புக் கூடாகி விட்டது. இந்த எலும்பு கூடாக இருக்கும் காட்சி எங்கிருந்து ஆரம்பித்தது என்று கேட்டால் பிரதானமாக சிங்கள குடியேற்றத்தில் இருந்து தான் ஆரம்பமாகியது. இந்த சிங்கள குடியேற்றத்தை சிங்கள தலைவர்கள் தமிழ் தலைவர்களை அரவணைத்து தான் செய்தார்கள். தமிழ் மக்களுடைய தாயகம் விழுங்கப்பட்டு சல்லடையாக்கப்பட்டு எலும்பு கூடாக இருக்கின்றதை நாங்கள் குடியேற்றத்திற்குள்ளாகத்தான் பார்க்கலாம்.

இந்தக் கடலும் கிழவனும் என்ற கதையில் இருக்கின்ற சோகத்துக்கு  நாங்கள் ஆளாகக் கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் கருத்தில் கொள்ள தவறக் கூடாது. எவ்வளவு பெரிய உயர்ந்த இலட்சியத்தை பேசுகின்றோம் என்பதல்ல முக்கியம். எவ்வளவு நடைமுறைச் சாத்தியமானதை செய்கிறோம் என்பது தான் முக்கியம்.

தமிழ் மக்களின் மூன்று தலைமைகளும் இப்பொழுது என்ன கோருகிறார்கள்? தமிழ் மக்களை தங்களோடு ஒன்று திரண்டு நிற்குமாறும் தமிழ் மக்கள் திரண்டால் தாங்கள் மக்களின் திரட்சியின் துணையோடு போராடி விடுதலையை அடைவோம் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் சொல்கிற விடுதலை சமஸ்டி. வட்டுக்கோட்டை தீர்மானத்திலிருந்து வெளியேறிய கொள்கை தான் சமஸ்டி. அதாவது இந்த மூன்று பெரும் அணிகளும் வட்டுக்கோட்டை தீர்மானத்திலிருந்து திட்டவட்டமாக வெளியேறி விட்டார்கள்.

இவ்வாறு வட்டுக் கோட்டைத் தீர்மானத்திலிருந்து வெளியேறிய நிலையில் இன்று காணப்படுகின்ற இந்த சமஸ்டி கோரிக்கையை அடைவதற்கு இவர்கள் சொல்லும் போராட்ட முறைகள் என்ன என்பது ஒரு கேள்வி. ஜனநாயக வழி முறையில்  மக்களை அணி திரட்டி போராட்டத்தில் வெற்றி பெறுதல் என்கிற ஒரு கருத்து இங்கு ஒரு அமைப்பால் முன் வைக்கப்பட்டுள்ளது. பூகோள அரசியலை கையாண்டு அதை கையாள்வதன் மூலம் வெல்லலாம் என்று இன்னொரு கருத்து சொல்லப்படுகிறது. இங்கு பிரதானமானதாக முதலாவது கருத்தை எடுத்து கொள்ளலாம். அதாவது, தமிழ் மக்களை அணி திரட்டி வெற்றி பெறுவது என்பதை மூன்று பேரும் தான் சொல்கிறார்கள். அவர்களுடைய போராட்ட வழிமுறைகள் பற்றி தெளிவான கருத்துகள் அவர்களிடம் இல்லை.  அவர்களிடம் எந்த திட்டமிடலும் இல்லை. இப்படியாக நிலைமை இருக்கிறது.

இப்பொழுது வரலாற்று ரீதியாக ஒரு விடயத்தைப் பார்ப்போம். 1936 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழ் மக்கள் எப்பொழுதும் போராட்டத்தின் பக்கம் தான் நின்று கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு தலைவன் போராட முன்னுக்கு வருகிறாரோ அவர் நம்பிக்கையுடன் மக்களுக்கு எந்த ஒரு போராட்ட முறையை சொல்கிறாரோ அவருக்கு பின்னால் அந்த போராட்ட முறைக்கு பின்னால் மக்கள் நின்று இருக்கிறார்கள். ஏகத் தலைமைகள் எப்பொழுதும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்துள்ளது. மக்கள் அந்த தலைமைக்கு பின்னால் சென்று இருக்கிறார்கள். 1936ஆம் ஆண்டு ஜி. ஜி பொன்னம்பலம் தலைமைக்கு வந்து தமிழ் மக்களை ஒன்று திரட்டிய போது 1956ஆம் ஆண்டு வரை மக்கள் அவருக்கு பின்னால் முழுமையாக நின்றார்கள். வேறு யாருக்கு பின்னாலும் போகவில்லை. முழுமையாக நின்றார்கள். ஆனால் கண்ட பலன் எதுவுமில்லை. எதிர்மறையான விளைவுகள் வந்தன.

பின்பு செல்வநாயகம் தமிழரசு கட்சியை தொடங்கி சமஸ்டி கோரிக்கையை முன்வைத்தார். இப்படி 1956ஆம் ஆண்டிலிருந்து 1976ஆம் ஆண்டு வரை செல்வநாயகத்திற்கு பின்னாலும் மக்கள் அப்படியே வந்தார்கள். அவர் கேட்டது எல்லாவற்றையும் மக்கள் செய்தார்கள். ஆர்ப்பாட்டம் செய்தார்கள், உண்ணாவிரதம் செய்தார்கள். ஆனால், செல்வநாயகம் தமிழ் மக்களுக்கு எதையுமே கொடுத்து விட்டு போகவில்லை.

இதில் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். தன் காலத்தில் தான் வெற்றி பெற தவறினால் ஐந்து வருடம் பத்து வருடத்திற்குள் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தால் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுகின்ற கலாசாரம் ஒன்று ஜனநாயகத்தில் இருக்கிறது. ஆனால் தான் தோற்கடிக்கப்பட்டு களத்தை விட்டு போகும் வரையும் போராட்டத்தை அவர் விடவில்லை. போராட்டம் தோல்வி அடைந்த பின்பும் அவர் களத்தில் நிற்கிறார். முதலில் பொன்னம்பலத்துடன் 20 வருடங்கள் போய் விட்டன. செல்வநாயகத்துடன் 20 வருடங்கள் போய் விட்டன. கடவுள் தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டு அவர் போராட்டத்தை அப்படியே விட்டு விட்டு போய் விட்டார். எந்த வெற்றியையும் அவர் தமிழ் மக்களுக்கு தேடி கொடுக்கவில்லை. ஆனால் மக்கள் அவருக்கு பின்னால் நின்றார்கள்.

பின்பு அமிர்தலிங்கம் வந்தார். குறிப்பாக செல்வநாயகத்திற்கு பின்பு அவர் ஏகோபித்த தலைவராக அநேகமாக 81 ஆம் ஆண்டு வரை இருந்தார். சுமாராக 77ஆம் ஆண்டிலிருந்து 81ஆம் ஆண்டு வரை அவர் இருந்தார். மக்களும் அவருடன் இருந்தார்கள். அவர் மாவட்ட அபிவிருத்தி சபை என்று ஒன்றை உருவாக்க முற்பட்ட போது தான் அவருடன் பிரிந்து அவருக்கு எதிரான கிளர்ச்சிகள் ஏற்பட்டன. அதுவரை அவர் எதையும் தேடி கொடுக்கவில்லை. இதுவரை நடந்த வரலாறு அப்படி தான் இருக்கிறது. பின்பு 81 ஆம் ஆண்டிலிருந்து 85 ஆம் ஆண்டு வரை ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் எழுந்தன. ஒரு தலைமை என்று இல்லை.  பல்வேறு தலைமையில் பல இயக்கங்கள் இருந்தன. தங்களுக்கு இடையில் எதிரும் புதிருமாகவும் ஒன்றுபட்டும் பலவாகவும் காணப்பட்டு ஒரு நிலைமாறு  கால கட்டம் நிலவியது. இங்கே ஒரு ஏக தலைமை என்று இருக்கவில்லை. அதாவது, ஆயுத போராட்ட காலத்தின் முதல் பகுதி 81ஆம் ஆண்டிலிருந்து 85ஆம் ஆண்டு வரை அப்படி ஒன்று இருக்கவில்லை. 85ஆம் ஆண்டுக்கு பின்பு பிரபாகரன் தலைமையில் விடுதலை புலிகள் ஏக அமைப்பாக வளர்ந்தது.  அன்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையும் தமிழ் மக்கள் அவர்கள் கேட்டது எல்லாவற்றையும் செய்தார்கள். அதிலும் நாங்கள் வெற்றியை பெறவில்லை.

இதன் பின்பு, 2009ஆம் ஆண்டிலிருந்து குறிப்பாக இன்று வரை பிரதானமாக தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறது. பன்னிரண்டு வருடங்களாக அவர்கள் எந்தவித வெற்றியையும் பெற்று கொடுக்கவில்லை. மாறாக எல்லா வகையிலேயும் ஏமாற்றங்களையும் “சிங்களவர்கள் ஏமாற்றி விட்டார்கள்” என்கிற வாக்கியத்தையும் தான் பார்க்கிறோம்.

1936ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் தோல்வியின் வரலாற்றை சுமக்கும் மக்களாக இருக்கிறோம். ஆனால் மக்கள் போராட்டத்தோடு நிற்கிறார்கள். போராட்டத்தின் பின் நின்றார்கள். ஆகவே, மக்களை திரட்டுவது என்பது மட்டும் மூலோபாயமாக இருக்க மாட்டாது. மக்கள் நிற்கிறார்கள். மக்கள் நின்றும் வெற்றியை பெற முடியவில்லை. இதை நாங்கள் ஒரு ஆய்வு முறையாக ஒரு வரலாற்றினுடைய நடைமுறையாக புரிந்து கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலவேளை உண்மைகள் தெரிந்தாலும் நாங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக அதை ஏற்க மறுத்தால் எங்களுடைய மக்களுக்கு நிச்சயமாக தீங்கு செய்பவராகவே ஆகுவோம். எங்களுடைய விடுதலைக்கு நாங்கள் பங்கம் விளைவித்தவர்களாகவே போவோம். அதை விடுத்து காணப்படும் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மையான நிலைமைகள் இப்படி தான் இருக்கின்றன. எனவே மக்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு குறையாமல் போராட்டத்தின் பக்கம் நூறு வீதம் நின்றார்கள். வெற்றி கிடைக்கவில்லை. எங்களுடைய உரிமைகள், வளங்கள், நலன்கள் எல்லாம் இருந்ததை விட மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. 

பேர்முடா வலய கடலுக்குள் கப்பல்களும், விமானங்களும், பிரயாணிகளும் காரணம் தெரியாமல் மூழ்கி போன வரலாறு பல நூற்றாண்டுகளாக இந்த பூமியில் நிகழ்ந்து கொண்டே இருந்தது. அண்மையில் அதற்கான விஞ்ஞான பூர்வமான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது பேர்முடா வலய கடல் தவிர்க்கப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டாக பேர்முடா குடாவில் கப்பல்கள் தாண்டது போல எங்களுடைய தமிழ் அரசியல் பேர்முடாவில் ஈழத் தமிழர்களது நலன்கள் எப்பொழுதுமே தாண்டு கொண்டு இருக்கின்றன. எப்படி  பேர்முடா அபாயத்தினுடைய காரணம் கண்டறியப்பட்டு இப்பொழுது அது தவிர்க்கப்பட்டு வருகின்றதோ அப்படியே எங்களுடைய நூறு ஆண்டு கால அரசியல் தோல்வியின் காரணம் கண்டறியப் பட வேண்டும். நாங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பேர்முடா அரசியல் குடாவிற்குள் வீழ்ந்து கொண்டே இருக்கின்ற துயரத்தை அனைவரும் விருப்பு வெறுப்பு இன்றி பாரபட்சம் இன்றி எம் முன்னால் உள்ள மனிதர்களோடு, எம் முன்னால் உள்ள தலைவர்களோடு, எமக்கு தெரிந்த வரலாற்றோடு, எமக்கு தெரிந்த உண்மைகளோடு பரிசீலனை செய்ய வேண்டும். இதில் எந்த விருப்பு வெறுப்புக்கும் இடம் இல்லை.

இவ்வாறு உண்மைகளை சொல்லும் பொழுது, அதாவது நாங்கள் அழிந்து கொண்டு போவதற்கான காரணத்தை கண்டறியாமல் இந்த பேர்முடா குடாவிற்குள் எங்களுடைய வாழ்வு மூழ்கி கொண்டு போகிறது என்று சொல்வதை நாங்கள் சிரத்தையுடன் பரிசீலிக்க வேண்டும். இது யாருக்கு எதிராகவும் சொல்லப்படுவதல்ல. அறிவியல் முறைமைக்குள்ளால் காரணத்தை கண்டுபிடித்து இந்த பேர்முடா குடாவை தவிர்க்கும் செயற்பாட்டை செய்ய வேண்டும்.

இனி நாங்கள் இந்த சமஸ்டி கோரிக்கையை பற்றி பார்ப்போம். இங்கு தலைவர்கள் சொல்கின்ற விளக்கங்களையும் சேர்த்துப் பார்த்து அந்த விளக்கங்களில் உள்ள தவறுகளையும் கண்டறிந்து நாங்கள் சரியான பாதைக்கு செல்வதற்கான வழியை பற்றி கண்டறிய வேண்டும். ஆனால் அந்த அளவுக்கு உண்மையை சொல்லி ஆராய்வதற்கு எங்களுடைய அரசியல் கலாசாரத்தில் இடமும் இல்லை, வாய்ப்பும் இல்லை. களத்தில் நிற்பவர்களின் அரசியற் செயற்பாடுகளோடு சம்பந்தப்பட்ட உண்மைகளை பற்றி சொல்ல முற்பட்டால் அதனை தனிப்பட்ட விடயமாக எடுத்து அதனை எதிர்க்க போய் விடுவார்கள். ஆதலினால் அதனை இங்கு தவிர்த்து விடுவோம்.

மு. திருநாவுக்கரசு-

கார்த்திகை 2022 நிமிர்வு இதழ்-

தமிழ்த் தலைமைகள் கோரும் சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிவகையும் - பகுதி : 02

1 comment:

  1. மேலே கட்டுரை வடிவில் உள்ள உரையின் காணொலியை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
    தமிழ்த் தலைமைகள் கோரும் சமஷ்டி முறையும் அதற்கான போராட்ட வழிவகையும்
    https://www.youtube.com/watch?v=Xk5IusH9GAw&t=2727s

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.